உ
சிவபோகசாரம்
1. அடிகள் வணக்கம்
சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம்குருநா தன். 1
அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவ னுயிர்க்குயிரா யோங்கித் – திருவார்
கமலைவரு ஞானப்ர காசனென வந்தே
அமலபதந் தந்தெனையாண் டான். 2
ஆரறிவார் நீதிவழி யாரறிவார் சித்திமுத்தி
ஆரறிவார் நற்றவங்கள் அன்பனைத்தும் – பாரெவர்க்கும்
கத்தன் கமலையில்வாழ் ஞானப்ர காசனெனும்
அத்தனென்போல் வந்திலனா னால். 3
அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று. 4
கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான். 5
உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன். 6
இருளுதய நீங்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன். 7
ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள். 8
தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன். 9
காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய். 10
2. பெறுதற் கருமை
ஒருமையுடன் ஈச ன ருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே. 11
தன்பெருமை யெண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை யாஞ்சகத்தை வேண்டாமை – தன்பால்
உடலைத் தினம்பழித்தல் ஒங்குசிவத் தோன்றல்
நடலைப் பிறப்பொழியு நாள். 12
உரையிறந்தால் உன்னும் உணர்விறந்தால் மாயைத்
திரையிறந்தால் காண்கின்ற தேவை – வரைபெருக
வாசிப் பதுநாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்
பூசிப்ப தும்சுத்தப் பொய். 13
பரம ரகசியத்தை பாழான வாயால்
இரவுபகல் எந்நேர மின்றிக் – குரல்நெரியக்
கூப்பிட்டுங் காணுமோ கோழைமட நெஞ்சேமால்
பூப்பிட்டுங் காணாப் பொருள். 14
ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சல னம்மாந் தினம். 15
அன்புமிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பதுண்டாய் – இன்பம்
தரும்பூ ரணத்துக்கே தாகமுண்டாய் ஒடி
வருங்கா ரணர்க்குண்மை வை. 16
3. அறியும் பகுதி
உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென் றிராதே – மருளைப்
பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம். 17
அகமாதி கண்ட அறிவாகி எங்குஞ்
சுகமாகி இன்ப சுகமாய்ச் – சுகாதீதத்
தானந்த வெள்ள மதுவாய்ச் சுகத்தைஅகன்
றானந்தம் ஆதியிலா தான். 18
இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை. 19
ஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கிஉயிர்
வேறாக நின்றஇடஞ் சொல்லின் – மாறா
இருளாய பாவனையிற் றெங்குமாய் நின்ற
பொருளேகாண் நீயே புணர். 20
நனவாதி அந்தத்தில் நாடுசுகந் தன்னைக்
கனவாதி அந்தத்தில் கண்டு – நனவாதி
தோற்றிடும்போ தந்தச் சுகரூபங் கண்டவர்கள்
மாற்றிடுவர் என்றும் மலம். 21
தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே
தத்துவங்கள் ஏதென்னின் சாற்றக்கேள் – மெத்துஞ்
சுகாரம்ப மாஞ்சிவத்தில் தோயாத மாயா
விகாரங்கள் தத்துவமா மே. 22
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நிறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப்
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஒர்விருத்தப் பாதிபோ தும். 23
4. உபதேச விளக்கம்
பரவிமனம் போகாப் பரத்தடைய நாளும்
இரவுபகல் அற்ற இடத்தே – திரமாக
நில்என்றான் கண்டஎல்லாம் நேதிபண்ணி மும்மலமும்
கொல்என்றான் ஞான குரு. 24
காயம் கரணமுதல் நான்கிற்குங் காரணந்தான்
ஆ யஇருள் மாயை அதுஎன்றால் – தூயபொருட்
போதனே ! செங்கமலப் பொற்பாத னே ! எனைநீ
ஏதேன்று சொல்லாய் இனி. 25
என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம். 26
எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்
அங்கங் குணர்த்தும் அறிவுநாம் – பொங்கு
மலமறைத்தல் மாயை மயக்கல் விகாரப்
பலமனைத்தும் கன்மமலம் பார். 27
செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்
நங்கமலை வாழ்கிளியே ! நாடிக்கேள் – சங்கையிலாத்
தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டிஅருள்
தத்துவத்தைக் காட்டியது தான். 28
தேசு செறிகமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் – பாசவினை
வாட்டினான் மீட்டுநான் வாரா வகையருளைக்
காட்டினான் கூட்டினான் காண். 29
நானிங்காய் நீயங்காய் நாட்டமற வைத்ததற்பின்
நானெங்கே நீயெங்கே நாதனே ! – வானெங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன்னறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நாம். 30
அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே
நிலைபெற் றிருந்தசுக ஞேயம் – மலைவற்
றிருந்ததுகண் டாயே இருந்தபடி அத்தோ(டு)
இருந்துவிடெப் போதும் இனி. 31
அகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் – மகத்தான
சிற்பரனா ரூர்தனில்வாழ் செங்கமலப் பொற்பாத
தற்பரஞா னப்பிரகா சன். 32
கிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த
நிட்டாநு பூதி நிலையிலே – முட்டா
திருவன்னி சேர்ந்துமாற் றேறியபொன் போல
வரும்இன்ப பூரணமா வை. 33
அநாதிசுக ரூபி அரனடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா – அநாதி
இருந்தமலம் போக்கி இறைஅருளி னாலே
இருந்தபடி யேகண் டிரு. 34
இற்றை வரைக்கர ணத்தோ டிணங்கினையே
இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே – இற்றைவரைத்
துன்பவெள்ளத் துள்ளே துளைந்தனையே யீதறநல்
இன்பவெள்ளத் துள்ளே இரு. 35
தேகாதி நானல்ல என்றறிந்தால் சித்தமயல்
போகாத தென்னையோ புண்ணியா – தேகாதி
தன்னளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்
உன்னளவே இல்லை உணர். 36
ஆறாறு தத்துவநீ அன்றென் றறிந்தனையே
ஆறாறும் கண்டறிவன் ஆயினையே – மாறாமல்
உன்னறிவில் ஆனந்தத் தோங்கினையே ஒராமல்
நின்னறிவை விட்டதுவாய் நில். 37
மாதா பிதாச்சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே – ஈதெல்லாம்
பொய்யென் றறிந்தனையே பூரணா னந்தவெள்ளம்
மெய்யென் றறிந்தனையே மெய். 38
மனையில்வரு போகத்தின் மாதர்மக்கள் பாச
வினையில் அழுந்திவிடாதே – உனைஇழந்து
காணாமற் கண்டானைக் காட்சி யறக்கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண். 39
சுத்தவத்தை நாடியிடுஞ் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேல் – சுத்தவத்தை
தானாய் இரண்டுந் தவிர்த்த சிவானந்த
வானாவை நீயே மதி. 40
சுத்தநிலம் உன்றனக்குச் சொல்லக்கேள் தொல்லைவினைத்
தத்துவங்கள் ஆறாறுந் தாம்பெருக் – கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை. 41
நெருப்பென்றால் வாய்சுடுமோ நெய்பால்தேன் கட்டி
கருப்பென்றால் தித்தியா காணீ – விருப்பமுடன்
நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமம் சற்குருவால் நில். 42
ஆர்க்குந் தெரியாத ஆனந்த இன்பவெள்ளம்
மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்
தெரியாப் பரப்பிரமஞ் சேர்த்தாய் உனக்குச்
சரியார் சிதம்பரநா தா. 43
5. அநுபூதி நிலை
உள்ளங் கரைய உடல்கரைய ஆனந்த
வெள்ளங் கரைபுரண்டு மேலாகக் – கள்ளமலம்
பொய்யாக என்னுட் புகுந்தவா றென்கொலோ
ஐயா தியாகவினோ தா. 44
எதேது செய்தாலும் எதேது சொன்னாலும்
எதேது சிந்தித் திருந்தாலும் – மாதேவா
நின்செயலே என்று நினதருளா லேஉணரில்
என்செயலே காண்கிலே னே. 45
மாயைமலம் எங்கே மறைந்ததோ ! மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ ! – காயமதில்
தங்கும் புருடனெங்கோ ! சச்சிதா னந்தவெள்ள்ம்
எங்கு மிகக்கோத்த தே. 46
நானுஞ் சுகவடிவாய் நண்ணினேன் நின்னருளால்
வானுஞ் சுகவடிவாய் மன்னிற்றே – வானுஞ்
சுகரூப மன்றுமணந் தோற்றநிலம் போலுன்
அகரூப மட்டே அது. 47
ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசனடி தேடி இளைத்தேனே – பேசரிய
பொற்பதத்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான். 48
நற்பதஞ்சேர் ஆரூரின் ஞானப்ர காசனெந்தை
தற்பரனோர் ஞானவாள் தந்தானே – சொற்பனத்தும்
காரார் மறலிஅயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலும் என்செய்ய லாம். 49
வெறும்பாழிற் பேரின்ப வெட்டவெளி தன்னில்
குறும்பாளர் காணாக் குடிலின் – உறும்பாசம்
ஒட்டிஎனை வைத்தனனே உற்றபிர பஞ்சமெலாம்
ஆட்டியஞா னப்பிரகா சன். 50
என்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் – மன்றில்
நடமாடும் ஆரூரன் ஞானப்ர காசன்
திடமாக என்னுள்ளத் தில். 51
நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் – பேதமற
ஒன்றிரண்டு தானறவே உண்மையிலே கூட்டிஎனை
இன்றறவே வைத்துவிட்டா ரே. 52
நன்னெஞ்சே நீகேட்ட நன்மையெல்லாஞ் சொல்லுதற்குக்
கன்னெஞ்ச மாலயனுங் காணாதோன் – வன்னெஞ்சர்
இன்னகுறை உண்டென்னா ஈசன் எதிர்வந்தான்
என்னகுறை சொல்லாய் இனி. 53
இட்டசனம் எங்கே இதமகிதந் தானெங்கே
துட்டசனம் எங்கே தொழிலெங்கே – சிட்டருடன்
கூடி யிருந்ததெங்கே குன்றாச் சிவானந்தம்
நாடியது வாயிருந்த நாள். 54
வாக்குமனக் காயத்தான் வந்தபொருள் அத்தனையும்
வாக்குமனக் காயமுடன் மாயுமே – வாக்குமனக்
காயம் உடனிழந்து காண்ஞா திருஞான
ஞேயம் இழந்த நிலை. 55
புசிப்போம் சிவபோகம் பூரணாமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் – முசிப்பின்றி
வாழ்வோஞ் சிவத்தையுணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோம் எமக்கார் சரி. 56
6. உபாய நிலை
அறிவுநீ என்ன அறிந்தறிந்து மாயைச்
செறிவுநான் என்றென்று சேர்ந்தால் – அறிவு
தெரிந்திடுமோ இன்பசுகஞ் சேர்ந்திடுமோ நின்னைப்
பிரிந்திடுமோ சென்மப் பிணி. 57
அரணங்கள் தாம்எரித்த அத்தரே என்னுள்
கரணங்கள் ஒட்டும்வகை காட்டீர் – கரணங்கள்
நீஅதுவாய் நில்லாமல் நின்னறிவைக் கண்டருளிற்
போயதுவாய் நின்றுவிடப் போம். 58
தானல்லா தத்தனைய்ந் தானென் றுழலாமல்
தானெல்லா மாயதனுள் தாக்காமல் – தானெல்லாம்
ஆனோம் எனும்போதந் தாக்காமல் ஈசனிடத்(து)
ஆனோனே ஆயினவ னாம். 59
தேகநாம் என்றென்றூ செஉபுவீர் ஈதில்வரும்
போகநாம் என்று புலம்புவீர் – நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படிநீர் போய். 60
தன்னை இழந்திடத்தே தானே சுகவடிவாய்
இன்னபடி என்றறியா எங்கோனுட் – பின்னமற
நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்(கு)
அன்றோ பிறப்பறுக்க லாம். 61
உன்னாதே பற்றா துரையாதே யொன்றி அதில்
நின்னாமம் இல்லை நிகழாதே – பன்னாட்
பரையிறந்து நிற்கும் பயனணைந்தார் நெஞ்சில்
திரையிறந்து நிற்கும் சிவம். 62
அருளறிந்து தானாம் அறிவறிந்தே ஆங்குட்
பொருளறிந்து தானடங்கிப் போத – இருளகல
விம்மா திருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம். 63
செறியுந் தனுவாதி சேர்ந்தறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே – அறிவிழந்து
நின்றால் சுகானந்த நீடு நிலைவேறு
சென்றால் சுகங்கிடையா தே. 64
தத்துவத்தை விட்டருளிற் றான்கலந்து தன்னிழப்பின்
மெத்துஞ் சுகத்தின் மிகஅழுந்திச் – சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்
அன்றோ சிவபோக மாம். 65
சுட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டகலா தென்றும் விரவுவோர் – இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர். 66
நின்னறிவில் யானொளித்து நீயாகி நின்றதுபோல்
என்னறிவில் நீயொளித்தே யானாகி – எந்நாளும்
நிற்கவல்லை யாமாகில் நின்சனனம் போக்குதற்குக்
கற்கவல்ல தேதுமில்லை காண். 67
இன்பசுகத் துள்ளே இருக்கலாம் எப்போதும்
துன்பவினை உன்னைத் தொடராது – வன்பா
மருட்டேக மாயடங்கி மாயாமல் நெஞ்சே
அருட்டேக மாயடங்கு வாய். 68
தேக மறந்து திருவருளாய் நின்றுசிவ
போகம் விளையப் புணர்நெஞ்சே – நோக
வருந்தாமல் தீவினையின் வாடாமல் துன்பம்
அருந்தாமல் நீபிறவா மல். 69
பூதாதி பாசமன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முட் பிரானன்றோ – வாதனைகள்
விட்டால் சுகமன்றோ என்றுணர்வில் வேண்டுவதுங்
கெட்டால் பிறப்பும் கெடும். 70
அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை
மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல்
ஏறித் திரும்பலா மே. 71
என்றுஞ் சனனத் திடர்க்கடலி லேமூழ்கிப்
பொன்றுமன மேஉனக்கோர் புத்திகேள் – நன்று
தனிச்சங்கஞ் சேராமல் தற்பரனைச் சேரில்
இனிச்சங்கஞ் சேரா திரு. 72
7. பணியறுத்தல்
அவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே
அவரவரைக் கொண்டியற்று மானால் – அவரவரை
நல்லார்பொல் லாரென்று நாடுவதென் நெஞ்சமே
எல்லாம் சிவன்செயலென் றெண். 73
எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ
எங்கே இருத்துமோ என்றறியேன் – கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொந்தொமென நின்றுநடம்
ஆடினான் எங்கோன் அருள். 74
போகம் புவனம் பொருந்துமிடம் எங்கெங்கும்
தேகம் கரணந் திரியுமே – யாகிலது
தன்னைநீ யென்று தவியாதே நெஞ்சமே
நின்னையே கண்டருளில் நில். 75
எதேது செய்திடினும் எதேது பேசிடினும்
எதேது சிந்தித் திருந்திடினும் – மாதேவன்
காட்டிடுவ தானவருட் கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட. 76
எடுத்தஉடற் கேய்ந்தகன்மம் எப்போதும் ஊட்டும்
விடுத்துவிட்டோம் என்பர் விழலர் – விடுத்த
ததுவன்றோ ஐந்துமலம் ஆறாறும் நீத்த
இதுவன்றோ யாம் துறவென் பேம். 77
எவ்வுயிருங் காக்கவோர் ஈசனுண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவதும் நெஞ்சே புழுங்குவதும் வேண்டாம்
வருகுவதும் தானே வரும். 78
முப்பதுஞ்சென் றால்விடியும் முப்பதுசென் றாலிருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே – எப்பொழுதும்
ஆங்காலம் எவ்வினையும் ஆகும் அதுதொலைந்து
போங்காலம் எவ்வினையும் போம். 79
ஆவலுற்றி டுஞ்சகலத் தாவதுவும் ஆங்கவரே
கேவலத்தின் மூழ்கிக் கிடப்பதுவும் – நாஅரற்றல்
இல்லாத சுத்தத் திருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயலென் றிரு. 80
பாசஞ் சடமுயிரோ தானாகப் பற்றறியா
ஈசன் இரண்டும் இணைத்தாட்டிப் – பூசலென்றுஞ்
செய்பவனே தானே திரும்பிஅருள் செய்யாமல்
உய்பவர்கள் உண்டோ உரை. 81
முற்றின்ப மாமருளின் மூழ்குவதும் மோகமிகு
சிற்றின்ப மாமருளிற் சேர்குவதும் – உற்றிங்(கு)
அறிந்தானன் நெஞ்சே அகிலாண்ட மெங்குஞ்
செறிந்தான் செயலே தெளி. 82
என்னிடத்தில் நின்செயலே இல்லையென்றால் யாதுறினும்
நின்னிடத்தில் யான்வேண்டல் நிச்சயமே – என்னிடத்தில்
இன்மை உயிர்க்குயிர்நீ யின்மை இருந்தியற்றின்
நன்மைதின்மைக் கேதுவோ நான். 83
நாம்பெரியர் என்னுமதை நாடா தடக்குமவர்
தாம்பெரியர் என்றுமறை சாற்றியிடும் – நாம்பெரியர்
என்பார் சிறியர் இவரலா லிவ்வுலகில்
துன்பார் சுமப்பார்கள் சொல். 84
கட்டமாங் காயம் கலையனைத்தும் கற்றாலும்
அட்டமா சித்தி அடைந்தாலும் – இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி. 85
மனவாக்குக் காயமுயிர் மன்னியசைப் பானும்
அனமாதி போகமளிப் பானும் – நனவாதி
கூட்டிவிடு வானுமுத்தி கூட்டிடுவா னும்பிறப்பில்
ஆட்டிவிடு வானும் அரன். 86
முன்னைவினைக் கீடா முதல்வன் அருள்நமைக்கொண்
டென்னவினை செய்ய இயற்றுமோ – இன்னவினை
செய்வோம் தவிர்போம் திரிவோம் இருப்போம்இங்(கு)
உய்வோம் எனும்வகையே து. 87
ஊட்டும் வினையிருந்தால் உன்னொணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் – கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே நெஞ்சே இரு. 88
என்னதன்று நிசெயலே என்றறிந்தால் யான்விரும்பி
என்னவென்று வாய்திறப்பேன் ஈசனே – இன்னம்இன்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும்உனக்(கு)
அப்படியே செய்தருளு வாய். 89
வன்மைபுரி காய மரப்பாவை தன்னைஅரன்
கன்மமெனுஞ் சூத்திரத்தால் கட்டியே – நன்மைதின்மை
ஆட்டுவது நாட தறிவிலார் தஞ்செயலாய்
நாட்டுதல்போல் உண்டோ நகை. 90
No comments:
Post a Comment